புதுடெல்லி: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் குழுவானது “பிரிக்ஸ்” என்று அழைக்கப்படுகிறது. இந்த சங்கத்தின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யா தலைமையில் நடைபெற உள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் வரும் 22 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று ரஷ்யா புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடி தனது பயணத்தின் போது, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்ய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று, இரண்டு நாள் பயணமாக இன்று ரஷ்யா செல்கிறேன். 16-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறேன்.
உலக வளர்ச்சி, சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, காலநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் பற்றிய விவாதங்களுக்கு முக்கிய தளமாக விளங்கும் பிரிக்ஸ் அமைப்பிற்குள் நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது.
கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களின் சேர்க்கையுடன் பிரிக்ஸ் விரிவாக்கம், உள்ளடக்கிய உலகளாவிய நன்மைக்கான உரையாடல் மற்றும் திட்டமிடலை ஊக்குவித்தது. ஜூலை 2024-ல் மாஸ்கோவில் நடைபெறும் வருடாந்திர உச்சிமாநாட்டின் அடிப்படையில், எனது கசான் பயணம் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும்.
மற்ற பிரிக்ஸ் தலைவர்களையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பிரிக்ஸ் மாநாடு குறித்து பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புதின், “பிரிக்ஸ் நாடு மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. இந்தியப் பிரதமர் மோடி கூறியது போல், மேற்கத்திய பிரதிநிதித்துவம் இல்லாத அமைப்பு. பிரிக்ஸ் ஆனது உலகளாவிய தெற்கு, தென்கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் கணிசமான நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. சர்வதேச பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கிய பங்களிப்பாளர்களாக உருவாகி வருகின்றன.
சீனா வளர்ந்து வரும் பொருளாதாரம். சீனாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ரஷ்யாவும் சீனாவும் தனித்துவமான உறவைப் பேணி வருகின்றன. எங்கள் உறவு சர்வதேச ஸ்திரத்தன்மையை தீர்மானிக்கிறது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.