சென்னை: அருந்ததியர் உள் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நவ.7-ம் தேதி சென்னையில் பேரணி நடத்தப்படும் என அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ் பூர்வீக குடிமக்களான தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர் ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கும் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டின். 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு குடும்பத்துக்கு 10 ஏக்கர் நிலம் வழங்கி ஏழை எளிய மக்களின் வாழ்வுரிமையை மாஞ்சோலையிலேயே நிலைநிறுத்த வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடி பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். அன்னிய முதலீடு மூலம் தொடங்கப்படும் தொழிற்சாலைகளை சென்னையில் மட்டும் தொடங்காமல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை போன்ற தென் மாவட்டங்களில் பரவலாக தொடங்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் மற்றும் வடமாவட்டங்களில் ஆதி திராவிடர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தென் தமிழகத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டு இனி வரும் காலங்களில் தொடங்கவிருக்கும் தொழிற்சாலைகளில் கடினமான, குறைந்த மதிப்புள்ள வேலைகளுக்கு மட்டுமே தென் தமிழக இளைஞர்களை பயன்படுத்தும் போக்கை தடுத்து நிறுத்தி உயர் பதவிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் நவ.7-ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.