தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 4-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆறு மற்றும் சின்னாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவை கோர்ட் மூடப்பட்டது. சின்னாற்றில் தொடர்ந்து தண்ணீர் வருவதால் சித்திரைசாவடி தடுப்பணையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள கிராமங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அணையை யாரும் பார்வையிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலையோர பகுதிகளில் பெய்த மழையால் நேற்று மாலை குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததால் இன்று காலை மீண்டும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டது.