அமராவதி: அமராவதியில் உள்ள சமூக நலத்துறை விடுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திர மாநிலத்தின் அடையாளமான தியான புத்தர் சிலைகள் சேற்றில் கிடக்கின்றன. இதை இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என அங்கிருந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவின் சக்தியின் சின்னம் தியான புத்தர். இதனால்தான் கடந்த முறை அமராவதியில் 125 அடி உயர தியான புத்தர் சிலையை தெலுங்கு தேசம் கட்சி நிறுவியது. கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள சிலை மிகவும் கம்பீரமாக உள்ளது. அன்றைய சந்திரபாபு நாயுடு அரசு, அதைச் சுற்றி சுவர் எழுப்பி, அந்தச் சுவர்களில் தியான புத்தர் சிலை அமைக்க முடிவு செய்து, சிறிய புத்தர் சிலைகளையும் தயார் செய்து, சமூக நலத் துறையின் மாணவர் விடுதியில் ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்தது.
இந்நிலையில், ஆந்திராவில் 2019 தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெகன், கடந்த 5 ஆண்டுகளாக தலைநகர் பிரச்னையை எழுப்பி ஆந்திராவுக்கு 3 தலைநகர் என்று பேசி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். மேலும், அவரது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பாக இருந்த புத்தர் சிலைகளை, அதிகாரிகள் விடுதி அறையில் இருந்து அகற்றி, வெளியே ஒரு மூலையில் வைத்துள்ளனர். இந்த சிலைகள் கடந்த 5 ஆண்டுகளாக மழை, வெயில், பனியில் நனைந்து சேற்றில் கிடக்கின்றன.
தற்போது ஆந்திராவில் மீண்டும் ஆட்சி மாறி சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் இந்த சிலைகள் தற்போது புதுப்பிக்கப்படுமா என சுற்றுலாத்துறை தலைமை பொறியாளர் நிவாசராவிடம் கேட்டபோது கண்டிப்பாக புதுப்பித்து வேறு இடத்தில் அமைக்கப்படும் என்றார்.