சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தென் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆனைமடுவு அணையில் 15 செ.மீ., தஞ்சாவூர் ஒரத்தநாடு 13 செ.மீ., கன்னியாகுமரி கோழிப்போர்விளை, தக்கலை, நெயூர், திருவாரூர் மன்னார்குடி, தஞ்சை ஆடுதுறை, தலா 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் சுததமல்லி அணை, குடவாசல், இரணியல் ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ. முதல்வர், மஞ்சளாறு, நீடாமங்கலத்தில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் தெற்கு கேரள கடற்கரையை ஒட்டி வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், நாளை முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.