சென்னை: வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னையில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏசி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06074) சென்னை – திருநெல்வேலி – திருநெல்வேலியில் இருந்து இன்று மாலை 4 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். எதிர் திசையில், ஏசி எக்ஸ்பிரஸ் (06073) நாளை சென்ட்ரலில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
சிறப்பு ரயில் (06076) அக்டோபர் 29, 30 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் தாம்பரம் – மதுரை – மதுரையில் இருந்து காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் மாலை 3.25 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுபுறம், சிறப்பு ரயில் (06075) தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 29, 30 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் மாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.20 மணிக்கு மதுரை சென்றடையும்.
சென்னை – கன்னியாகுமரி – சிறப்பு ரயில் (06079) சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 11.25 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். கன்னியாகுமரியில் இருந்து நாளை மதியம் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் (06080) புறப்படும். மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
கூடுதலாக, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படும். அதன்படி, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06094) ஈரோட்டில் இருந்து அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.55 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் காலை 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். எதிர் திசையில், முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06093) சென்ட்ரலில் இருந்து அக். 30, 31 மற்றும் நவ. 3 ஆகிய தேதிகளில் மதியம் 2.45 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் இரவு 9.15 மணிக்கு ஈரோடு சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.