சென்னை: மேஜர் முகுந்த் வரதராஜன்- திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
அமரன் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு படக்குழுவினர் சிறப்பு திரையிடல் செய்தனர். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல்- திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் இயக்குநர் ராஜ்குமார் படமாக்கியுள்ளார்.
மேஜர் முகுந்த் வரதராஜன்- திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும்- நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட் என பதிவிட்டிருந்தார்.