சென்னை: தெற்கு ரயில்வேயில் உள்ள 24 ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இங்கு 700-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.
இதில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி உள்ளது. இதற்கிடையில், தெற்கு ரயில்வேயில் உள்ள பல்வேறு வாகன நிறுத்துமிடங்களில் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் காலாவதியானது. வாகன நிறுத்துமிடங்களுக்கான புதிய ஒப்பந்ததாரர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.
இதனால் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 24 ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பெரும்பாலான ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த ஒப்பந்ததாரர்கள் கட்டம் கட்டமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், கோட்டூர்புரம், செவ்வாய்ப்பேட்டை ரோடு, கொருக்குப்பேட்டை சரக்கு கொட்டை, மதுராந்தகம், பெரம்பூர், அரக்கோணம், பரங்கிமலை, திண்டிவனம், தடா, தரமணி, காட்பாடி உள்ளிட்ட 24 இடங்களில் வாகன நிறுத்துமிட வசதிக்காக ஒப்பந்ததாரர்களை விரைவில் தேர்வு செய்ய உள்ளோம். இப்போது, செயல்முறை தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.