புதுடெல்லி: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் காங்கிரஸ் மோசமாக அம்பலப்பட்டு நிற்கிறது என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, இமாச்சல், தெலங்கானா மாநிலங்களில் நிதிப்பிரச்னை அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சனைகள் குறித்து பேசிய கட்சித்தலைவர் கார்கே, ‘ ஒவ்வொரு மாநில காங்கிரஸ் தலைமையும் சரியான பட்ஜெட்டில் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும்.
அப்படிச்செய்தால் எதிர்வரும் காலங்களில் நிதிச் சிக்கல்களுக்கு அவை வழிவகுக்காது’ என்றார். இந்த கருத்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்து கூறியதாவது: பொய்யான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால் அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினமானது அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி தற்போதுதான் உணர்ந்துள்ளது.
பிரச்சாரத்திற்கு முன்பு மக்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வாக்குறுதிகளை தங்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்பதை அறிந்து காங்கிரஸ் கட்சி இப்போது, மக்கள் முன் மோசமாக அம்பலமாகி நிற்கிறார்கள்.
காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வளர்ச்சிப் பாதையும், நிதி ஆரோக்கியமும் மோசமாக மாறி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் போலி வாக்குறுதி கலாச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற அரசியலால் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் தான். இமாச்சலப் பிரதேசத்தில், அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.
தெலங்கானா விவசாயிகள் தங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட கடன் தள்ளுபடிக்காகக் காத்திருக்கின்றனர். காங்கிரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இதுபோன்ற ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. இந்திய மக்கள் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் விரும்புகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் அதே பழைய போலி வாக்குறுதிகளை அல்ல. இவ்வாறு மோடி கூறினார்.