புதுடில்லி: கடந்த அக்., 15-ல், தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிப்பில், கேரளாவின் வயநாடு பார்லிமென்ட் தொகுதி மற்றும் பல மாநிலங்களில் உள்ள, 47 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு, நவ., 13-ல் இடைத்தேர்தல் நடக்கும் என கூறப்பட்டது. ஆனால் நவ., 13-ம் தேதி தேர்தலை நடத்தினால் பல தொகுதிகளில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் என பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு சட்டப் பேரவைத் தொகுதியில், நவ., 13 மற்றும் 15-ம் தேதிகளில் கல்பாதி ரதோற்சவம் கொண்டாடப்படுவதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என, காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது. பஞ்சாபில் குருநானக்கின் 555-வது பிரகாஷ் பர்வ விழா நடைபெறவுள்ள நிலையில், நவ., 13-ம் தேதி முதல், ‘அகண்ட பாதை’ நிகழ்ச்சி துவங்கும் என, நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை மாற்ற, பல கட்சிகள் பரிந்துரை செய்தன.
இதேபோல் உத்தரபிரதேசத்தில் கார்த்திகை பூர்ணிமா, நவ., 15-ம் தேதி கொண்டாடப்படுவதால், 3, 4 நாட்கள் மக்கள் பல இடங்களுக்குச் செல்வர். இதனால் தேதியை மாற்ற பா.ஜ., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆர்.எல்.டி., போன்ற கட்சிகள் வலியுறுத்தின. மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கான தேர்தல்.
இந்நிலையில், பாலக்காடு சட்டப் பேரவைத் தொகுதி, உ.பி.யில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் பஞ்சாபில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைக்காலத் தேர்தல் தேதியை வரும் 13-ம் தேதியில் இருந்து 20-ம் தேதியாக மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமாஜ்வாதி, ஆம் ஆத்மி எதிர்ப்பு உ.பி.,யில் 9 சட்டப் பேரவைகளுக்கான இடைத்தேர்தல் தேதி, 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவிக்கையில், ‘உ.பி.,யில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.
மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். இதைப் புரிந்துகொண்ட பாஜக, தேர்தல் தோல்வியைத் தவிர்க்க இந்தப் பழைய வித்தையைச் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயலுக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.