சென்னை: நீதிமன்றம் எச்சரிக்கை… கல்லாரில் யானைகள் வழித்தடத்தில் உள்ள தோட்டக்கலை பண்ணையை இடமாற்றம் செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது.அதை வேறு இடத்துக்கு மாற்றி, நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி, மனோஜ் இமானுவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘யானை வழித்தடத்தில் உள்ள பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக, அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டது.’இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் குறைந்தபட்ச மரியாதையாவது கொடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்’ என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், கல்லார் தோட்டத்தை இடமாற்றுவது தொடர்பாக, அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், தோட்டக்கலை துறை செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் எச்சரித்தனர். பின், வழக்கு விசாரணையை ஆக., 7க்கு தள்ளி வைத்தனர்.