கேப் கானவெரல்: விண்வெளித் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இவை அனைத்தும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
இந்நிலையில், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளிக்கு ராக்கெட்களை அனுப்புவதில் உலக நாடுகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுடனும் இஸ்ரோ ஒப்பந்தம் செய்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இஸ்ரோவின் ஜிசாட்-என்2 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-என்2, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 (பால்கன் 9_ ராக்கெட்) மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 4700 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுக்கு இடையே வணிக ரீதியாக செயற்கைகோள் ஏவுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராதாகிருஷ்ணன் துரைராஜ், ஜிசாட்-என்2 செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை உறுதிப்படுத்தினார்.