இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். அவரது கருத்து நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “நான் காலை 6.20 முதல் இரவு 8.30 வரை வேலை செய்கிறேன். அப்படிச் செயல்பட்டால்தான் இந்தியா முன்னேறும்.
தற்போது இந்தியாவின் உற்பத்தி குறியீடு உலக அளவில் பின்தங்கியுள்ளது. அதேபோல், நாட்டில் நிலவும் ஊழலையும், அதிகார வர்க்கத்தினரின் கடமை தாமதத்தையும் மாற்றினால் மட்டுமே இந்தியா விரைவான வளர்ச்சியை எட்ட முடியும்,” என்றார் நாராயணமூர்த்தி. மன்னர்கள் ஆட்சி செய்த போது, நாட்டு மக்களை அடிமைகளாகப் பிடித்து, சங்கிலியில் கட்டி, உணவு மட்டும் கொடுத்து, பெரிய அரண்மனைகள், கோட்டைகள், மாளிகைகள் கட்டினார்கள்.
தொழிலாளி வர்க்கம் அங்கு தொடங்கியது. வெள்ளையர்கள் ஆட்சி செய்த போது, அவர்களுக்கு அடிபணியாதவர்களை பிடித்து, கப்பல்களில் ஏற்றி, மலேசியா, பர்மா, இலங்கை, அந்தமான் போன்ற தீவுகளில் இறக்கி, தோட்டங்களில் வேலை செய்ய வைத்தார்கள். உலகெங்கிலும் உள்ள தொழிலாளி வர்க்கம் தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய பின்னர் 19-ம் நூற்றாண்டில் 8 மணிநேர நாள் நடைமுறைக்கு வந்தது.
கம்யூனிச சித்தாந்தங்களின் வளர்ச்சியால் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, போனஸ், மருத்துவக் காப்பீடு, குடும்பப் பாதுகாப்பு ஆகியவை தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஃபோர்டு நிறுவனத்தின் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு, 40 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறைய தவறுகளைச் செய்ததாகக் கண்டறிந்தார். எனவே, தொழிலாளர்களை திறமையாக வேலைக்கு அமர்த்துவதற்காக 40 மணி நேர வேலையை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் வந்த பிறகு, தொழிலாளர் நலனை மேம்படுத்த 5 நாட்கள் வேலை, சுற்றுலா சலுகை, வீட்டிலிருந்து வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவை உள்ளன. நாராயணமூர்த்தி போன்றவர்கள் காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் 6.20-க்குள் அலுவலகத்தில் இருக்க முடியும்.
இருப்பினும், அனைத்து தொழிலாளர்களும் அதைப் பெறுவதில்லை. பெங்களூரு போன்ற நகரங்களில் இளைஞர்கள் வீட்டை விட்டு அலுவலகம் செல்ல 1 முதல் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியில் நாராயணமூர்த்தி போன்றவர்களின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அவரது நிறுவனம் மட்டும் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யவில்லை. பல புதுமையான நிறுவனங்களில் இளைஞர்களின் உழைப்பால் நாடு வளர்ச்சி கண்டுள்ளது.
தற்போதைய ஊழலை ஒழித்தால்தான் நாடு மும்மடங்கு வளர்ச்சி அடையும். மேலும், 70 மணி நேர வேலை என்ற எண்ணம் அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தாது, ஆர்வத்துடன் பணிபுரிய முன்வரும் இளைஞர்களை இழிவுபடுத்தும் காரணியாக இது அமையும்!