திருவண்ணாமலை: ஒருமுறை பயிரிட்டால் 25 ஆண்டு பலன் தருகிறது டிராகன் ப்ரூட் என்று சாகுபடி செய்து லாபம் குவித்து வரும் விவசாயி தெரிவித்துள்ளார். இதில் செலவு குறைவு, லாபம் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒருமுறை நடவு செய்தால் 20 முதல் 25 ஆண்டுகள் வரையில் பலன்தரும் டிராகன் ப்ரூட்டை பயிரிட்டு லாபம் பார்த்து வருவதாக திருவண்ணாமலை விவசாயி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நெல், மணிலா, கரும்பு அதிகளவு பயிரிடப்பட்டு வரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்று பயிராக தைவான் கிங் ரெட் என்ற டிராகன் பழ செடியை பயிரிட்டுள்ளார் இளையாங்கன்னியைச் சேர்ந்த விவசாயி டோம்னிக்.
ஒரு ஏக்கர் நிலத்தில் ஏழு அடி உயரத்திற்கு 500 சிமென்ட் தூண்களை நட்டு வைத்து ஒரு தூணிற்கு நான்கு செடிகள் வீதம் 2000 டிராகன் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 12 மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்ய முடியும் என கூறும் விவசாயி, கடந்த 18 மாதத்தில் மட்டும் ஒன்றரை டன் மகசூல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருவதால் கிடைக்கும் சுவையான பழத்தை பொதுமக்களே நேரடியாக வந்து வாங்கிச் செல்வதாகவும் கிலோ 150 ரூபாய்க்கு விற்று வருவதாக கூறினார் டோம்னிக்.
டிராகன் செடிகளுக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படாததால் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் வாரத்திற்கு 2 முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. பரமாரிப்பு குறைவு, ஒரு முறை நடவு செய்தால் 20 முதல் 25 ஆண்டுகள் வரையில் பலன் கிடைக்கும் என்பதால் மற்ற விவசாயிகளும் டிராகனை பயிரிடலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் விவசாயி டோம்னிக்.