திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநில சுற்றுலாத் துறைகள் மூலம் தரிசன டிக்கெட் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை அந்தந்த மாநில சுற்றுலா துறைகளில் நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி உள்ளது.
இவற்றை இடைத்தரகர்கள் மொத்தமாக கொள்முதல் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தொடர் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் அனைத்து மாநில சுற்றுலாத் துறைகளுக்கும் வழங்கப்பட்டு வந்த தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ரத்து செய்துள்ளது. இதுவரை, தெலுங்கானா மற்றும் ஆந்திராவிற்கு ஒரு நாளைக்கு 1000 டிக்கெட்டுகள், கர்நாடகாவிற்கு 750, கேரளாவிற்கு 250, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தலா 500 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, அனைத்து மாநில சுற்றுலாத் துறைகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் டிசம்பர் 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்படும். அதேபோல், ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் முன்பதிவின் போது நாள் ஒன்றுக்கு ₹300 கட்டணத்தில் 1000 முதல் 2000 டிக்கெட்டுகளுக்கான டிக்கெட்டுகளை வழங்கியது.
இந்த டிக்கெட்டுகளையும் கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பதிலாக, திருப்பதியில் வழங்கப்படும் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீட்டை வழங்கக்கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஐபி தரிசன டிக்கெட் உயர்வு திருப்பதி ரேணிகுண்டா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஏழுமலையான் கோயிலின் விஐபி தரிசனத்திற்காக தினமும் 100 வாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை தேவஸ்தானம் 200 ஆக உயர்த்தியுள்ளது. இந்த டிக்கெட்டுகளை விமான நிலையத்தில் இருக்கும் முன்பதிவு கவுன்டரில் பெற்றுக்கொள்ளலாம்.
இதேபோல், திருமலையில் உள்ள கோகுலம் ரெஸ்ட் பில்டிங் பின்புறம் உள்ள ஸ்ரீ வாணி டிக்கெட் கவுன்டரில் ஆஃப்லைனில் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 900ல் இருந்து 800 ஆக குறைக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். தரிசனத்திற்கு 18 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 60,803 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 21,930 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூபாய் நோட்டுகளாக ₹3.27 கோடி கிடைத்தது. இன்று காலை வைகுண்டம் கியூ வளாகத்தில் 19 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 18 மணி நேரம் கழித்து தரிசனம் செய்வார்கள். ₹300 டிக்கெட் வாங்கிய பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.