ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியதாவது:- தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக என் மீது பொய் வழக்குகள் மற்றும் ஊழல் வழக்குகளை தொடர்ந்து பதிவு செய்தனர். ஆனால் இன்று உண்மை வென்றுள்ளது. நாங்கள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களால் வெற்றி பெற்றுள்ளோம்.
இந்தத் தேர்தல் மிகவும் சவாலானதாகவும், கடினமானதாகவும் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, எங்கள் அணி உறுப்பினர்களை களமிறக்கி வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளோம். அதேபோல், எங்கள் குழு உறுப்பினர்கள் சிறப்பாக களப்பணி செய்து நாங்கள் விரும்பியதை வழங்கியுள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில் ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 14 இடங்களில் 5-ல் வெற்றி பெற்றோம். தற்போதைய சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
நான் முன்பு சிறையிலிருந்து வெளியே வந்திருந்தால், லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். என் மனைவி கல்பனா சோரன் ஒரு நபர் ராணுவமாக பணியாற்றி எங்களுக்கு வெற்றியை தேடி தந்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எங்களை தோற்கடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. என்ன தந்திரம் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஜார்கண்டில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஊடுருவுவதாக பாஜக தலைவர்கள் பல பொய்யான கதைகளை கூறினர்.
தங்கள் பிரச்சாரக் கூட்டங்களில் பெரும்பாலானவை இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். பழங்குடியின மக்களின் வாக்குகளை சிதறடிக்க இதுவே சரியான வழி என நினைத்தனர். ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. வகுப்பாசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள உறவைப் போல வாக்காளர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான உறவும் இணக்கமாக இருக்க வேண்டும். மாணவர்களின் தேவைகளை ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடங்களில் நாங்கள் அவர்களுடன் எப்படி இருந்தோம் என்பதை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
அவர்கள் எங்களுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். வாக்காளர்களின் மனதில் தோன்றும் ஒவ்வொரு பிரச்சினைக்கும், ஒவ்வொரு கேள்விக்கும் நாங்கள் பதிலளிப்பதை உறுதி செய்தோம். பழங்குடியின மக்களின் வாக்குகளை கவர பாஜக தலைவர்கள் முயன்றனர். ஆனால் அது நடக்கவில்லை. இந்த வெற்றிக்கு என் அப்பா சிபு சோரனும் காரணம். ஏனென்றால் அவர் பழங்குடி மக்களுடன் நெருக்கமாக இருந்தார். பழங்குடி மக்கள் அவரால் திரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டனர். தேர்தல் பிரசாரத்தில் அவர் எங்களுடன் இல்லாதது இதுவே முதல் முறை. ஆனால் அவரது போராட்டத்தையும் பங்களிப்பையும் மக்கள் மறக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.