இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் சமீபத்தில் பிரிந்ததாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, சில சமூக வலைதளங்களிலும், யூடியூப்பிலும் அவர்கள் குறித்து பல்வேறு அவதூறு கருத்துகள் வெளியாகின. “அவதூறான கருத்துக்களை பரப்பும் வகையில் வெளியிடப்படும் எந்தவொரு செய்தி, வீடியோ அல்லது சமூக வலைதளப் பதிவுகளையும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்” என்று ஏ.ஆர் சார்பில் அவரது வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில். “கடந்த 2 மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறேன். தனித்து வாழ முடிவு செய்துள்ளேன். அதனால் ஏ.ஆர். ரஹ்மானின் பணி பாதிக்கப்பட கூடாது. எங்கள் பிரிவினை குறித்து யாரும் தவறான மற்றும் தரம் தாழ்ந்த கருத்துக்களை பரப்ப வேண்டாம்.
ஏ.ஆர். ரஹ்மான் உலகின் மிக அற்புதமான மனிதர். இருவருக்கும் தற்காலிக இடைவெளி தேவைப்பட்டதால் நாங்கள் பிரிந்தோம். நாங்கள் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. உடல்நலம் தேறியதும் சென்னை திரும்புவேன். தயவு செய்து அவரது பெயரை கெடுக்கும் வகையில் அவதூறு பரப்ப வேண்டாம்,” என்றார்.