இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் குஷ்பு மற்றும் சிவகார்த்திகேயன் இடையே உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குஷ்புவின் கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.
அப்போது நடிகர் சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கை குறித்து கேட்டபோது, “தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் என்று எனக்கு முன் எந்த உதாரணமும் இல்லை. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், 100% அதற்காக உழைத்தேன். எனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு மக்களை மகிழ்விக்க ஆரம்பித்தேன். மக்கள் என்னை தொலைக்காட்சியில் பொழுதுபோக்காகப் பார்த்தார்கள். சினிமா துறையிலும் அதையே செய்ய ஆரம்பித்தேன்.
தொலைக்காட்சியாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, நகைச்சுவையை எனது கேடயமாக பயன்படுத்தினேன். இது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை உணர்ந்தேன். ஆரம்பத்திலிருந்தே சினிமா என் ஆசை. நான் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தேன். அதுதான் எனக்கு திரையுலகில் நுழைய வாய்ப்பளித்தது,” என்றார்.
மேலும், சினிமா மீதான தனது காதல் குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, “நான் ரஜினியின் தீவிர ரசிகன். ஆனால் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது முதல் இரண்டு நாட்களிலேயே தியேட்டர்களில் பார்த்து விடுவேன். 2006-ம் ஆண்டுக்குப் பிறகு நான் எந்தப் படத்தையும் திருட்டுப் பதிப்பில் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு எனக்கு சினிமா பிடிக்கும்.