கோவா: இந்தியாவின் 55-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்து வருகிறது. ‘சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், “சினிமா துறை மற்ற தொழில்களில் இருந்து வேறுபட்டது. மற்ற தொழில்களில் வேலை முடிந்து வீட்டுக்குப் போகலாம். ஆனால் சினிமாவில் அப்படி இல்லை.
200, 300 பேர் ஒரே இடத்திற்குச் சென்று குடும்பம் போல் தங்குகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், சில நேரங்களில், தெரிந்தோ தெரியாமலோ, எல்லைகள் மீறப்படுகின்றன. படப்பிடிப்பு தளத்தில் எல்லை மீறுபவர்களை எப்படி எதிர்கொள்கிறார் என்று என் கணவர் மணிரத்னத்திடம் கேட்டேன். அப்படிச் செய்ததற்காக ஒருவரை செட்டில் இருந்து வெளியேற்றியதாக அவர் என்னிடம் கூறினார்.
ஒரு கிராமத்தில் 200 பேர் இருக்கும் போது, விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், எல்லை மீறல்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. மலையாள திரையுலகில் இதுதான் நடக்கிறது. தமிழ் சினிமா ஷூட்டிங் முடிஞ்சதும் சென்னை, தெலுங்கு சினிமா ஷூட்டிங் முடிஞ்சதும் ஹைதராபாத், கர்நாடகாவில் இருந்தால் பெங்களூர் போவேன்.
ஆனால் மலையாள சினிமா ஷூட்டிங் முடிந்து வீடு திரும்ப முடியாது. அங்கு அப்படியொரு இடம் இல்லாததால் வெளியில் எங்கும் செல்ல முடியாது. இதனால்தான் படப்பிடிப்பு தளத்தில் எல்லை மீறப்படுகிறது,” என்றார்.