சிம்லா: அரசு பஸ்களில் குட்கா மற்றும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதித்து ஹிமாச்சல பிரதேச அரசு அறிவித்துள்ளது. துணை முதலமைச்சரும், போக்குவரத்து அமைச்சருமான முகேஷ் அக்னிஹோத்ரி தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்படி மாநிலம் முழுவதும் 1,000 பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்படும். இதில் 327 மின்சார பேருந்துகள், 250 மினி பேருந்துகள் மற்றும் 100 மினி டெம்போ பேருந்துகள் அடங்கும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் குட்கா மற்றும் மதுபான விளம்பரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளில் பால், காய்கறிகள் போன்ற பொருட்களை கொண்டு வருவதற்கான கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், வருவாய் குறைவாக உள்ள வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் முகேஷ் அக்னிஹோத்ரி தெரிவித்தார்.