சென்னை: ஒரு நல்ல பட்டுப் புடவை வாங்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பட்டுப்புடவை எல்லா பெண்களுக்கும் பிடித்தமான பாரம்பரிய உடை. பாரம்பரியத்தை விரும்பும் அனைத்து பெண்களும் பட்டுப் புடவையை கட்டாயம் விரும்புவார்கள். ஆனால் இந்த பட்டுப் புடவையின் விலை சற்று அதிகம். இதனால் தரமான பட்டுப் புடவையை நாம் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். திருமண காரியங்களுக்கு பட்டுப் புடவை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. திருமண வீடுகளில் பட்டுப் புடவை இன்றி திருமணம் நடைபெறாது.
பார்ப்பதற்கு ஒரே மாதிரியான பட்டுப் புடவையின் விலை, கடைக்குக் கடை வேறுபடும். அதனால், பட்டின் தரம் குறித்து எப்போதும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். நகையில் கலந்திருக்கும் தங்கத்தைப் போலவே, பட்டுப் புடவையின் தரத்தைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் குழப்பங்கள் ஏற்படும். ஒரு நல்ல பட்டுப் புடவை வாங்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பட்டுபோல ஜொலிக்கிறது என்பார்கள். ஆனால், பளபளப்பது எல்லாம் நல்ல பட்டுப் புடவை அல்ல. அதனால், வெறும் பளபளப்பை மட்டுமே கருத்தில்கொண்டு புடவையை தேர்ந்தெடுக்க முடிவு செய்யக்கூடாது. பட்டு நூலின் விலை, தயார் செய்வதற்கான கூலி உட்பட செலவுகள் அதிகம். அதனால், ரொம்பவும் மலிவான விலையில் பட்டுப் புடவைகள் தருவதாகச் சொன்னால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏனெனில், சிலர் 2,000 ரூபாய்க்கும் குறைவாகப் பட்டுப் புடவையின் விலையைக் கூறுவார்கள். ஆனால், மிகக் குறைந்த அளவு நல்ல பட்டு நூல் கொண்டு தயாரித்த பட்டுப் புடவை என்றாலும் குறைந்தபட்சம் 3,500 ரூபாய்க்குத்தான் விற்க முடியும். இதேபோல, நிறைய டிசைன் உள்ள புடவைக்கு விலையை மிகக் குறைத்துச் சொன்னாலும், அதன் தரம் பற்றி சந்தேகம்கொள்ள வேண்டும்.
சிலர், டிசைனை வைத்து பட்டுப் புடவைக்கு பெயர்கள் வைத்திருப்பார்கள். ஆனால், என்ன பெயர் வைத்தாலும் பட்டு நூல் தரம் ஒன்றுதான். அதனால், பெயரை மட்டும் வைத்து, பட்டின் தரத்தை முடிவு செய்யக்கூடாது. பட்டு என்பது நான்கு வகைகள்தான். மல்பெர்ரி வகைகளே நம் பகுதியில் அதிகம் கிடைக்கக்கூடியது.