இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தொடர் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தியதுடன், லெபனானின் தெற்கு எல்லையில் ஹிஸ்புல்லா போராளிகளும் தாக்குதல்களை நடத்தினர். இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.
இந்நிலையில் நவம்பர் 26ஆம் தேதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.ஆனால், அதே நாளில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 42 பேர் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா பதில் தாக்குதல் நடத்திய பின்னரே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கூற்றுப்படி, அமெரிக்காவால் தரகு செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு “நல்ல செய்தி” என்று வர்ணிக்கப்பட்டது. ஹிஸ்புல்லா இடையேயான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்காவும் பிரிட்டனும் கூட்டாக அறிவித்தன.
இதற்கான உத்தரவுக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எவ்வாறாயினும், ஹெஸ்புல்லா உடன்படிக்கையை மீறினால் தாக்குதல்கள் மீண்டும் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். தெற்கு லெபனானில் சண்டையில் இருந்து வெளியேறிய மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி, போர் நிறுத்தத்தை வரவேற்றதுடன், நாட்டில் அமைதி நிலவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதை அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு கண்காணித்து வருகிறது.