கான்பெரா: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சமூகப் பொறுப்பு சமூக ஊடக நிறுவனங்களுக்கு உள்ளது என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவுக்கு வியாழக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது உலகளவில் முன்னுதாரணமாக அமைந்தது. இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறியதாவது:- “சமூக ஊடக நிறுவனங்களுக்கு இப்போது நமது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சமூகப் பொறுப்பும் உள்ளது. அதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த சட்டம் மிகவும் தெளிவாக உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. வயதுக்குட்பட்டவர்கள் மது அருந்தக் கூடாது என்ற சட்டத்தைப் போன்றதுதான் இதுவும். மேலும், இது இளம் ஆஸ்திரேலியர்களுக்கு நல்ல பலன்களைத் தருவதோடு, தீமைகளையும் குறைக்கும்,” என்றார். அடுத்த 12 மாதங்களுக்கு பிறகு அங்கு சட்டம் அமலுக்கு வர உள்ளது.
எனினும், இது எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்து அரசாங்கம் தெளிவான விளக்கத்தை வழங்கவில்லை. ஒத்துழைக்க மறுக்கும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு 32.5 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.