புதுடெல்லி: குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரமான கிப்ட் சிட்டியில் ஏஐ தொழில்நுட்ப சேவைகளை நிறுவுவது தொடர்பாக குஜராத்அரசின் அறிவியல் – தொழில்நுட்பத் துறை மற்றும் ஐபிஎம் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கூறுகையில்,‘‘ஐபிஎம் உடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏஐ தொழில்நுட்பத்தின் வாயிலாக டிஜிட்டல் தளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுடன் குஜராத்தை வழிநடத்தவும் உதவும் என்றார்.
ஐபிஎம் இந்தியா மற்றும் தெற்காசியாவின் நிர்வாக இயக்குநர்சந்தீப் படேல் கூறுகையில், “நிறுவனங்களின் தனிப்பயன்பாட்டுக்கான மென்பொருள்களை சிறப்பான வடிவமைத்து தருவதிலும், டிஜிட்டல் அடிப்படையிலான தீர்வுகளை ஏற்படுத்தி தருவதிலும் ஐபிஎம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் முக்கிய பங்கு வகிக்கும்.
நிறுவனங்களின் வணிகத்தில் ஏஐ பயன்பாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பது இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது. சிறந்த உற்பத்தி திறன், கண்டுபிடிப்பு, வாடிக்கையாளர் அனுபவம் உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் ஏஐ பயன்பாட்டால் சாத்தியமாகிறது.
குஜராத் மாநிலத்தின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்த இந்தபுரிந்துணர்வு ஒப்பந்தம் பெரிதும் உதவும். குஜராத் முழுவதிலும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாடத்திட்டங்களை உருவாக்கவும், 2030 ஆண்டுக்குள் 30மில்லியன் மக்களுக்கு திறன் சார்பயிற்சிகளை அளிக்கவும், 2026-ம்ஆண்டின் இறுதிக்குள் ஏஐ தொடர்பான பயிற்சிகளை அளிக்கவும் ஐபிஎம் உறுதி பூண்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.