
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சால் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது.
இதன் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலையை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் முதல் இன்று காலை வரை தொடர் மழை பெய்து வரும் நிலையில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 50 செ.மீ (503 மி.மீ) மழை பெய்துள்ளது. இதனால் ஊத்தங்கரையை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் ஊருக்குள் புகுந்தது. குறிப்பாக, ஊத்தங்கரை-திருப்பத்தூர் சாலையில் நிரம்பி வழிந்த பரசனேரி ஏரிக்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மினிவேன்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊத்தங்கரை அண்ணாநகர் மற்றும் காமராஜ் நகர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு மற்றும் எஸ்பி தங்கதுரை ஆகியோர் இன்று காலை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.