லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் படேபூர் மாவட்டம் இனியத்பூரை சேர்ந்தவர் சன்யாலி. இவரது மனைவி ராம்காலி. இந்த தம்பதிக்கு பால்கோவிந்த், தீரஜ், மணீஷ் ஆகிய 3 மகன்களும், ரேகா, ராஜ்குமாரி, சுலேகா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு சன்யாலியின் மூத்த மகன் பால்கோவிந்த் தனது 15வது வயதில் வேலைக்காக மும்பைக்கு குடிபெயர்ந்தார். அவருடன் பல நண்பர்களும் உறவினர்களும் மும்பைக்கு சென்றிருந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு அனைவரும் ஊருக்குத் திரும்பினர். அப்போது பால்கோவிந்த் தவறுதலாக வேறு ரயிலில் ஏறி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் சென்றார். சொந்த ஊருக்கு செல்வதற்கு போதிய பணம் இல்லாத நிலையில், அங்கேயே தங்கி கிடைத்த வேலைகளை செய்து வந்தார். ஈஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கினார். இப்போது அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பால்கோவிந்த் அடிக்கடி வீடியோக்களை வெளியிடுவார். இந்த வீடியோக்களை அவரது தங்கை ராஜ்குமாரி சமீபத்தில் பார்த்துள்ளார். பால்கோவிந்த் சிறுவனாக இருந்தபோது முன்பல்லை உடைத்தார். உடைந்த பல் மற்றும் அவரது முகத்தின் தோற்றத்தின் அடிப்படையில், ராஜ்குமாரி தனது நீண்ட காலமாக இழந்த சகோதரர் என்பதை உறுதிப்படுத்தினார். குடும்பத்தினரும் அவரை அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து ராஜ்குமாரி சமூக வலைதளம் மூலம் பால்கோவிந்தின் செல்போன் எண்ணை பெற்று வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டார். முதலில் தனது தங்கையை அடையாளம் காண முடியாத பால்கோவிந்த், பின்னர் அவளையும் அவரது குடும்பத்தினரையும் வீடியோ அழைப்பில் பார்த்து கதறி அழுதார்.
திருமணத்திற்கு பிறகு உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கணவருடன் ராஜ்குமாரி வசித்து வருகிறார். கடந்த 20ம் தேதி பால் கோவிந்த் கான்பூர் சென்று தனது தங்கை ராஜ்குமாரி மற்றும் அவரது உறவினர்களை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.