
சென்னை: நடிகர் வடிவேலுவை அவதூறாகப் பேச மாட்டோம் என நடிகர் சிங்கமுத்து உறுதிமொழி அளித்து மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.5 கோடி அவதூறு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும், தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளைத் தெரிவிக்க தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சிங்கமுத்து தாக்கல் செய்த பதில் மனுவில் எந்த வார்த்தை அவதூறானது என்று வடிவேலு குறிப்பிடவில்லை. திரையுலகைச் சேர்ந்தவர்களின் கருத்துக்களை மட்டுமே பேட்டியில் தெரிவித்ததாக அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வடிவேலு வழக்கு தொடர்ந்த பிறகும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டி அளித்து வந்ததாக கூறப்பட்டது.

ஆனால், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு அவர் எந்தப் பேட்டியும் அளிக்கவில்லை. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கடைசி வாய்ப்பாக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வடிவேலுவுக்கு எதிராக கூறிய கருத்துக்களை வாபஸ் பெறுவதாகவும், எதிர்காலத்தில் அவரை அவதூறாகப் பேச மாட்டோம் என்றும் சிங்கமுத்து உத்தரவாதம் அளித்தும் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பேட்டி காணொளிகளை நீக்கக் கோரி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு கடிதம் அனுப்பவும் சிங்கமுத்துவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.