சென்னை: விளையாட்டுத் தொழில்நுட்பத்திற்கான ஸ்டார்ட்அப் மாநாட்டை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், டெல்லியில் வரும் 12-13 தேதிகளில் நடத்துகிறது. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: “சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (சென்னை ஐஐடி), உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம் (Center of Excellence in Sports Science and Analytics – CESSA) டெல்லியில் ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் ‘விளையாட்டுத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் மாநாட்டை’ நடத்தவிருக்கிறது. இந்தியாவில் விளையாட்டு ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் சென்னை ஐஐடி-ன் அர்ப்பணிப்பையும், 2036-ல் ஒலிம்பிக்கை நடத்துவதற்கு வசதியாக இந்திய அரசாங்கத்திற்கு தொழில்நுட்ப ஆதரவையும், திட்டங்களையும் இம்மாநாடு வெளிப்படுத்தும்.
இத்துறையில் இந்தியா தற்சார்பு இலக்கை எட்டும் வகையில் உள்நாட்டுத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவை நோக்கி செயல்படுவதே இந்த மையத்தின்நோக்கமாகும். 2024 ஜூலை 26-ந் தேதி தொடங்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்-2024 தொடங்குவதற்கு முன்னதாக, தேசத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்கான இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, தொலைநோக்குத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு இந்த மாநாடு தொடக்கமாக விளங்கும். மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா முழுவதிலும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துப் பேசிய சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) மற்றும் சென்னை ஐஐடி செஸ்ஸா தலைவர் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா, “விளையாட்டுத் தொழில்நுட்பம் இந்தியாவில் ஒரு புதிய தொழில்துறையாகும். நம் நாட்டின் விளையாட்டு வீர்ர்கள் உலக அரங்கில் அங்கீகாரம் பெற இந்த இடத்தில் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை வளர்ப்பது அவசியமாகிறது” என்றார்.
சென்னை ஐஐடி விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வு மையத்தின் (CESSA) தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் குமார், ESPNcricinfo-வின் உலகளாவிய முன்னாள் தலைவர் ஆவார். இந்நிகழ்வு குறித்துப் பேசிய சென்னை ஐஐடி செஸ்ஸா தலைமை நிர்வாக அதிகாரியான ரமேஷ்குமார் கூறும்போது, “புதுமை-மேம்பாடு ஆகியவற்றுடன், பல்வேறு விளையாட்டுத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முன்னிலை வகிக்க விரும்புகிறோம். இங்குள்ள வாய்ப்புகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, தயாரிப்புகள் சிலவற்றின் பயன்பாடுகளைக் காண்பிப்பதன் மூலம் வீரர்களுக்கு நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை எடுத்துரைக்கிறோம். அத்துடன் இத்துறையில் உள்ள கூட்டாண்மை வாய்ப்புகளை செயல்படுத்த பொது மற்றும் தனியார் நிறுவனங்களை ஓரிடத்தில் இணைக்க விரும்புகிறோம்” என்றார்.
விளையாட்டுத் துறையில் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பதும், விளையாட்டுகளில் தொழில்நுட்ப சூழலை உருவாக்குவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாகும். 10 புதிய விளையாட்டுத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுக்கு மொத்தம் ரூ.5 கோடி சென்னை ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் மூலம் செஸ்ஸா முதலீடு செய்வதுடன் தொழில்முதலீட்டு உதவியும் வழங்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து குறைந்தது 200 விளையாட்டுத் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களை புதுமையான சிந்தனைகளுடன் உருவாக்குவதற்கான உந்துதலை சென்னை ஐஐடி ஏற்படுத்தும்.
நாடு முழுவதும் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு ஐஐடியின் டிஜிட்டல் தளங்கள் மூலம் தரமான விளையாட்டுக் கல்வியை அணுகுவதற்கான தொலைநோக்குப் பார்வையையும் திட்டங்களையும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் விளையாட்டுக் கல்வியில் ஈடுபட்டுள்ள வீரர்களிடையே சாத்தியமான ஒத்துழைப்பு மாதிரிகளும் இந்த மாநாட்டில் எடுத்துரைக்கப்படும்.
செஸ்ஸாவின் துடிப்பான தொழில்நுட்ப ஆதரவுடன் 2036-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வகையில் இந்திய அரசுக்கும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் முன்முயற்சிகளுக்கும் சென்னை ஐஐடி ஆதரவை வழங்கும். அத்துடன் துணை கட்டமைப்புகளை உருவாக்கவும் இந்த மாநாடு வழிவகுக்கும்.
சர்வதேச போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்களின் நீண்ட கால வெற்றியை உறுதி செய்வதற்காக, தேசிய விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் (NCSSR) மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படக்கூடிய இந்தியாவிலுள்ள விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இந்நிறுவனம் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது.
சென்னை ஐஐடி செஸ்ஸாவின் பல்வேறு இலக்குகள் பின்வருமாறு: • குறிப்பிட்ட தயாரிப்புகளையும் சேவைகளையும் உள்நாட்டுமயமாக்க இந்தியாவில் பல்வேறு விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவான தொழில்நுட்பத்தை உருவாக்குதல். • உடற்பயிற்சி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், தொகுப்பாளர்கள், மேலாளர்கள், வீரர்கள் முதல் விளையாட்டு சூழல் அமைப்பில் உள்ள வீரர்களுக்கு தரமான விளையாட்டுக் கல்விக்கான அணுகலை வழங்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
வீரர்களுடன் இணைந்து NPTEL மூலம் தொடங்கப்பட்ட பல்வேறு விளையாட்டுப் படிப்புகளின் உலகளாவிய- சுயவேகக் கற்றலுக்கான தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல். • சென்னை ஐஐடி-ன் டிஜிட்டல் கற்றல் முயற்சிகளின் வெற்றியை மேலும் கட்டமைத்து, விளையாட்டுத் துறையை மையமாகக் கொண்ட படிப்புகளுக்கான டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை செயல்படுத்தி, விளையாட்டு மதிப்புச் சங்கிலியில் உள்ள பல்வேறு வீரர்களுக்கு திறன் வாய்ப்புகளை வழங்குதல்.
கல்வி- மேம்பாடு, கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், இந்தியாவில் உள்ள பல்வேறு வீரர்களுடன் இணைந்து விளையாட்டுக் கல்வி மற்றும் படிப்புகள் மூலம் ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்துவதற்கான விரிவான திட்டத்தை உருவாக்க சென்னை ஐஐடி மாநாடு வழிவகை செய்யும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.