புதுடெல்லி: சிரியாவுக்கான பயண அறிவுறுத்தலை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டது. அதில், அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை மக்கள் சிரியாவுக்கான பயணங்களைத் தவிர்க்கவேண்டும். பொதுமக்கள் முடிந்த வரை விரைவாக சிரியாவை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.
சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதற்கிடையே, சிரியாவுக்கான பயண அறிவுறுத்தலை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டது. அதில், அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை மக்கள் சிரியாவுக்கான பயணங்களைத் தவிர்க்கவேண்டும். பொதுமக்கள் முடிந்த வரை விரைவாக சிரியாவை விட்டு வெளியேறுங்கள். +963993385973 என்ற அவசர கால உதவி எண்ணை தொடர்பு கொள்ளும்படியும், hoc.damascus@mea.gov.in என்ற இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளவும் என தெரிவித்திருந்தது.
அதிபர் பஷர் அல் ஆசாத் சிரியாவை விட்டு தப்பியோடினார். கிளர்ச்சியாளர்கள் அங்கு ஆட்சியை கைப்பற்றியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், சிரியாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். டமாஸ்கஸ் நகரில் உள்ள இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது.