சென்னை: முகத்தை அழகுபடுத்த பலர் ஆடம்பரமான பொருள்களை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவிடுகின்றனர். ஆனால் பணத்தை செலவிடுவதை விட வீட்டிலேயே எளிதாக இயற்கையாக கிடைக்கும் பொருள்களை உபயோகப்படுத்தினால் மென்மையான, பளபளக்கும் சருமத்தை பெறலாம்.
குறிப்பாக பால். இது உங்கள் சருமத்திற்கு ஊட்டச்சத்தை தருவது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது. மேலும் இது உங்கள் சருமத்தின் ஈரபதத்தை அதிகரிக்கும், சூரிய ஒளிக்கதிர்கள் சருமத்தில் விழும்போது ஏற்படும் நிறங்கள் மாறுவதை தடுக்கும். வீட்டிலேயே பால் மற்றும் பாதாம் பேஸ் பேக் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
பால் சிறந்த ஆண்டி-டானிங் குணமுடையது. வெயிலில் வெளியே செல்லும் போது சிலருக்கு சருமத்தில் கரும் புள்ளிகள் மற்றும் அலர்ஜி ஏற்படும். இந்த வெயில்பட்ட சருமத்தில் இருக்கும் கரு நிறத்தை போக்கக்கூடியது பால் மற்றும் பாதாம் பேஸ் பேக். பாதாம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கு ஒரு அற்புதமான தீர்வாகவும் செயல்படுகிறது.
இந்த பேஸ் பேக்கை தயாரிக்க, 3 அல்லது 4 பாதாம் பருப்பை குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் இரவில் ஊற வைக்கவும். இந்த ஊறவைத்த பாதாமை ஒரு தேக்கரண்டி பாலுடன் மறுநாள் காலை பேஸ்டாக அரைக்கவும்.
அதன் பின் முகம், கழுத்து பகுதிகளில் தேய்த்துவிட்டு பதினைந்து நிமிடங்கள் விடவும். அதன்பின் முகத்தை தண்ணீரில் நனைத்தப்படி, சில நிமிடங்களுக்கு அதே கலவையை கொண்டு தேய்த்து சுத்தமான நீரினால் முகம், கழுத்து பகுதிகளை கழுவுங்கள். இப்படி செய்து வர சருமத்தில் இருக்கும் கருமை நிறத்தை போக்கும்.