சென்னை: விதிகளை மீறி தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது தொடர்பாக 51 ஆயிரத்து 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 57 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் காவல்துறை, வழக்கறிஞர் மற்றும் ஊடக ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்த சென்னை போக்குவரத்து காவல் துறையின் நடவடிக்கையை அமல்படுத்தக் கோரி தேவதாஸ் காந்தி வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் சார்பில் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
தடை செய்யப்பட்ட ‘சன் கன்ட்ரோல் பிலிம்’ வாகனங்களில் ஒட்டப்படுவதை கண்காணிக்கவும், தடுக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் வாகனங்களில் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை ஒட்டுபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் வரை சென்னை மாநகரில் ‘சன் கன்ட்ரோல் பிலிம்’ ஒட்டியதாக 6 ஆயிரத்து 279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.31 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் சட்டவிரோதமாக ஸ்டிக்கர் ஒட்டியது தொடர்பாக 51 ஆயிரத்து 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை ரூ.2 கோடியே 57 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் போலீசார், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்களின் சட்ட விரோத ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தியது குறித்து இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.