திருவள்ளூர்: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த 11, 12-ம் தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுக்கு மழைநீர் செல்கிறது. அந்த வகையில் பூண்டி ஏரிக்கு நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அதிகளவில் மழைநீர் வந்து கொண்டிருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 12-ம் தேதி மதியம் முதல் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
முதலில் வினாடிக்கு 1000 கன அடி என திறந்து விடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கடந்த 13-ம் தேதி காலை முதல் வினாடிக்கு 16,500 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்நிலையில், சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், நீர்வரத்து குறைந்து, கடந்த 14-ம் தேதி மாலை முதல், பூண்டி ஏரியில் இருந்து, 12 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை நேற்று காலை வினாடிக்கு 8,500 கன அடியாக நீர்வளத்துறை குறைத்தது. இந்நிலையில் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 2,040 கன அடியாக உள்ளது.
எனவே, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,518 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 32.99 அடியாகவும் உள்ளது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவை இன்று காலை 6 மணியளவில் நீர்வளத்துறை அதிகாரிகள் வினாடிக்கு 1,000 கன அடியாக குறைத்தனர். நீர் வரத்துக்கு ஏற்ப இந்த அளவு குறைக்கப்படும் அல்லது அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.