ஹைதராபாத்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படம் 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1,409 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ வசூல் சாதனையை இப்படம் முறியடித்துள்ளது. இந்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி இந்தி பதிப்பில் மட்டும் ரூ.561.50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பதிப்பில் ரூ.50 கோடியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கு மற்றும் இந்தியில் வசூல் படத்திற்கு பலமாக பார்க்கப்படுகிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இப்படம் 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1,409 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ரூ.1,300 கோடி வசூல் சாதனையை ‘புஷ்பா 2’ முறியடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் அமீர்கானின் ‘தங்கல்’ ரூ.2,122.3 கோடி வசூல் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ ரூ.1,788.06 கோடி வசூல் செய்து உள்ளது. ‘புஷ்பா 2’ ரூ.1,400 கோடிக்கு மேல் வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
சுகுமார் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ் பின்னணி இசை அமைத்திருக்கும் இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.