பெங்களூரு: தமிழ் புத்தக திருவிழா தலைவர் வணங்காமுடி பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் பெங்களூருவில் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவாஜி நகர் அருகே உள்ள இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் டிசம்பர் 20-ம் தேதி காலை 10 மணிக்கு புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தொடங்கி வைக்கிறார். 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மாலையில் நூல் வெளியீட்டு விழா, கருத்தரங்கம், பட்டிமன்றம், இலக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
கன்னட எழுத்தாளர் எஸ்.ஜி.சீதாராமையா, பகுஜன் சமாஜ் கட்சியின் தென்னிந்திய முன்னாள் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், திமுக முன்னாள் எம்எல்ஏ கோ.வி. நன்னன், எழுத்தாளர் என்.சொக்கன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கேற்பார்கள், பெங்களூருவில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் பங்கேற்பார்கள் என்றார்.