கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான யானைகள் கலந்து கொள்கின்றன. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த யானை அணிவகுப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. யானை அணிவகுப்பு எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களையும் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
2 யானைகளுக்கு இடையே 3 மீட்டர் இடைவெளியும், பட்டாசு வெடிக்கும் யானைக்கும் இடையே 5 மீட்டர் இடைவெளியும், பொதுமக்களுக்கும் யானைக்கும் இடையே 8 மீட்டர் இடைவெளியும் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இதை எதிர்த்து திருச்சூர் பூரம் திருவிழாவை நடத்தும் திருவம்பாடி தேவசம் மற்றும் பரமேக்காவு தேவசம் போர்டு நிர்வாக குழு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தேவசம் போர்டு கோரிக்கை விடுத்துள்ளது.