சென்னை: மாநகர பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் சென்னை சாலையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு மாநகர போக்குவரத்து கழகம் மூலம் வழித்தட எண் 102 கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று மதியம் 2 மணியளவில் பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு புறப்பட்டது.
அடையாறு எல்பி ரோடு அருகே சென்ற போது பஸ் இன்ஜினில் இருந்து புகை வந்தது. இதைப் பார்த்த டிரைவர், கண்டக்டர் ஆகியோர் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, பயணிகளை அவசர அவசரமாக கீழே இறக்கினர். இதற்கிடையில், சிறு தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருபுறமும் தடுப்புகளை அமைத்து பொதுமக்கள் யாரும் அருகில் வராதவாறு போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தனியார் நிறுவனத்தால், சி.என்.ஜி., (கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) மூலம் இயங்கும் வகையில் மாற்றப்பட்ட மாநகர பஸ், கடந்த 28ம் தேதி முதல் வழித்தட எண் 102ல் இயக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று மதியம் அடையாறு பணிமனை அருகே சென்றபோது, இன்ஜினில் இருந்து புகை வந்ததை பார்த்து டிரைவர், கண்டக்டர் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிவிட்டனர்.
உடனடியாக காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் உதவியுடன் தீ முற்றிலும் அணைக்கப்பட்டு, பேருந்து பாதுகாப்பாக அருகில் உள்ள அடையாறு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அவ்வாறு கூறுகிறது.
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) மற்றும் எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) எனப்படும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து மாநகர போக்குவரத்து கழகம் உள்ளிட்ட நிறுவனங்களில் சிஎன்ஜி, எல்என்ஜி பஸ்கள் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.