வங்கதேசத்தில், 27 வயதான அலல் உதின் என்ற வாலிபர், 3 ஹிந்து கோவில்களில் சிலைகளை சேதப்படுத்திய குற்றத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களில், வங்கதேசத்தில் சில ஹிந்து கோவில்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இந்த சம்பவம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இது தொடர்பாக, தினாஜ்பூரில் உள்ள பிர்கஞ்ச் பகுதியில் காளி கோவிலில் 5 சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பீல்தோரா மற்றும் ஷாகுவாய் பகுதிகளில் உள்ள மற்றொரு கோவிலிலும் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள், வங்கதேசத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளன.
இதற்கான விசாரணை நடத்திய போலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில், போஷ்ல்கந்தா கிராமத்தில் வசிக்கும் 27 வயதான அலல் உதின் என்பவரை கைது செய்தனர். விசாரணையின் போது, உதின் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவில் கமிட்டி தலைவர் ஜனார்த்தன் ராய், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து, “இது போன்ற செயலை நாங்கள் இங்கு பார்த்ததில்லை. சிலைகளை சேதப்படுத்திய நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்,” என்று கூறினார்.