மஞ்ஞுமேல் பாய்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் கொண்டாட்டப்பட்டு வரும் குணா படப் பாடலின் புதிய வெர்ஷன், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடனமாடும் வீடியோக்களாக சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.
என்னதான் எவர்க்ரீன் பாடலாக இருந்தாலும், 33 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோல் ஒரு கம்பேக் கொடுத்த பாடல் வேறு எதுவும் இருக்காது. காதலை கொண்டாடிய பாடலை, நட்பு கீதமாக மஞ்ஞுமேல் பாய்ஸ் மாற்றி காட்டியிருந்த நிலையில், புது ட்ரெண்டுக்குள் புகுந்துள்ளது இந்த குணா படப் பாடல். இளையராஜாவின் இன்னிசையில் கொடைக்கானல் பாறைகளுக்கு இடையே ஒலித்த இந்த பாடலுக்கு கொஞ்சம் கானா இசையை சேர்த்து குத்தாட்டம் போட வைத்துள்ளார் Revvy என்ற டிஜே ஒருவர்.
இந்த ரீல்ஸ்க்கு நண்பர்கள், தம்பதி, தந்தை மகள், அம்மா மகன், அண்ணன் தங்கை என விதவிதமான ஜோடிகளின் ஆட்டம் நீண்டுக்கொண்டே செல்கிறது. வேலை செய்யும் இடத்தில் இதுபோன்ற புத்தாக்கம் கட்டாயம் தேவை என்கிறார்கள் ரீல்ஸ் பிரபலங்கள். பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்பு இந்த பாடலின் வைபோடு பல குழந்தைகள் சென்ற கதைகளும் ஏராளம். இந்தியன் டீம், டி20 உலகக் கோப்பையை வென்றதை கூட இப்படி கொண்டாடி உள்ளார்கள் நம்ம ஊரு ரீல்ஸ் ஆட்டக்காரர்கள்.
பிரபலங்களையும் விட்டு வைக்காத இந்த ட்ரெண்ட், மாநிலங்கள் கடந்தும் வைரலாகி உள்ளது. இசைக்கும் நடனத்துக்கும் மொழிகளும் எல்லைகளும் கிடையாது என்பதை சோஷியல் மீடியா காலம், அவ்வப்போது இதுபோன்ற பாடல்களால் மெய்ப்பித்துக்கொண்டே உள்ளது.