தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனி கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது:- மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், விலைவாசி உயர்ந்து வருகிறது. ஜிஎஸ்டி இல்லாமல் எந்தப் பொருளும் இல்லை.
வைரங்களுக்கு இரண்டரை சதவீத ஜிஎஸ்டியும், ஏழைகள் அணியும் கைத்தறிக்கு 18 சதவீத வரியும் விதிக்கின்றனர். உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஆனால், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்க மறுத்துவிட்டார்.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்க்காமல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறது மத்திய பாஜக அரசு. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றாலே நாடு குட்டிச் சுவராக மாறிவிடும். மாநில உரிமைகள் பறிபோகும். தேன்கனிக்கோட்டை பகுதியில், வன சரணாலயம் என்ற பெயரில், 138 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், காலங்காலமாக வசிக்கும் விவசாயிகள், காலி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.