தொலைத்தொடர்பு, வானிலை, ரிமோட் சென்சிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை வடிவமைத்து தயாரித்து, அவற்றை விண்ணில் செலுத்தும் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து தயாரித்து வருகிறது. இந்நிலையில், 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ‘பாரதிய அந்தர்க்ஷா நிலையம்’ என்ற இந்திய விண்வெளி நிலையத்தை நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, விண்வெளி நறுக்குதல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக எஸ்டிஎக்ஸ்-1 மற்றும் எஸ்டிஎக்ஸ்-2 என்ற இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டவை.
இந்நிலையில், இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து டிசம்பர் 30-ம் தேதி இரவு 9.58 மணிக்கு பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இவை இரண்டும் பூமியில் இருந்து 470 கிமீ தொலைவில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் வைக்கப்பட்டு பின்னர் ஒருங்கிணைக்கப்படும். இரண்டு விண்கலங்கள் தனித்தனியாக ஏவப்பட்டு பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டால் இந்த சாதனையை நிகழ்த்தும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அமெரிக்காவை போன்று இந்தியாவும் விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும். மேலும், ஒரு விண்கலத்தில் இருந்து மற்றொரு விண்கலத்திற்கு மனிதர்களை மாற்றவும், விண்வெளிக்கு அனுப்பும் போது எரிபொருளை மாற்றவும் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏவப்பட உள்ள பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட்டின் 4-வது நிலை (போயம்-4) 24 ஆராய்ச்சி கருவிகளைக் கொண்டுள்ளது. அதில் 14 கருவிகளை இஸ்ரோ தயாரித்துள்ளது. மீதமுள்ள 10 கருவிகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் புதுமை நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் விண்வெளியில் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் உயிரி தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.