தென்காசி: கேரள எல்லையான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு சாலையோரங்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டப்படும் சம்பவங்கள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, கழிவுகள் கொண்டு வரப்படுவது பெருமளவு தடுக்கப்பட்டாலும், அவ்வப்போது கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் செயல் முழுமையாக நிறுத்தப்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 இடங்களில் கேரளாவில் இருந்து டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் கேரள அதிகாரிகள் வந்து இந்த கழிவுகளை லாரிகளில் ஏற்றி மீண்டும் கேரளாவுக்கு கொண்டு சென்றனர். கொட்டப்பட்ட கழிவுகளை மீண்டும் எடுத்து கேரளாவுக்கு கொண்டு செல்வது இதுவே முதல் முறை. அரசு நிலங்களில் கழிவுகளை கொட்டுவது ஒருபுறம் இருக்க, தனியார் நிலங்களில் குப்பை கொட்டுவது சில இடங்களில் தொடர்கிறது.
குறிப்பிட்ட ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத தனியார் நிலங்களின் உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள் போன்றவற்றை வாங்கி அங்கு கொட்டுகின்றனர். அதிலிருந்து பயன்படுத்தக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை தரம் பிரித்த பின், பயனற்ற குப்பைகளுக்கு தீ வைத்து, பள்ளங்களில் கொட்டி, மண்ணை நிரப்புகின்றனர்.
சேமிக்கப்படும் கழிவுகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பெத்தநாட்டார்பட்டி-செல்லத்தாயார்புரம் சாலையோரம் விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் தனியார் நிலத்தில் சமீபகாலமாக பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்து குப்பைகளை அகற்ற உத்தரவிட்டனர்.
இதையடுத்து அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை மண் நிரப்பி மூடியுள்ளனர். பணத்தின் பெயரால் மண்ணை அழிக்கும் செயலுக்கு தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, தென்காசி தெற்கு மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் பழனி சங்கர் கூறுகையில், ”கேரளாவில் இருந்து கழிவுகளை கொண்டு வர, இடைத்தரகர்களாக பலர் செயல்படுகின்றனர். திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சாலையோரங்களில் உள்ள பயனற்ற காலி மனைகளை குறிவைத்து, மனையின் உரிமையாளர்களிடம் பேசி ஒப்பந்தம் போடுகின்றனர்.
குப்பையை பள்ளத்தில் கொட்டி, மண்ணை போட்டு மூடுவதாக உறுதியளித்து, ரூ. 10,000 முதல் இதற்காக மாதம் ரூ. 30,000 ரூபாய் வரை பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறுகின்றனர். தொடர்ந்து, கழிவுகளை விலைக்கு வாங்கி, தரம் பிரித்து, தனியார் இடத்தில், 15 அடிக்கு குழி தோண்டி, குப்பையை கொட்டி, நிரம்பியதும், மண் அள்ளுகின்றனர். லாரி டிரைவர்களிடம் ரூ.100-க்கு மேல் வசூலிக்கின்றனர். ஒரு லோடுக்கு 30,000 ரூபாய் வீதம் பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பைகளை கொண்டு வருகின்றனர். கழிவுகள் மூலம் அதிக வருவாய் ஈட்டும் இந்த வணிகத்தில் ஒரு பெரிய நெட்வொர்க் ஈடுபட்டுள்ளது. அவர்கள் இயற்கை வளங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் மண்ணை நாசம் செய்து வருகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.