சென்னை: நாம் உயிர் வாழுவதற்குத் தேவையான முக்கியமான ஒன்று உணவு. வீட்டில் இந்த உணவைத் தயாரிக்கக் கூடிய இடம் சமையல் அறை. இது எப்படி அமையணும் என்று பார்ப்போம்.
சிறிய வீடானாலும், பெரிய வீடானாலும் அந்த வீட்டில் சமையல் அறை சரியானபடி அமைத்துக் கொள்ளாவிட்டால் வயதுக்கு மீறிய வியாதிகளும், கணவன்-மனைவி, பிள்ளைகள் எனஅமர்ந்து சாப்பிட முடியாத நிலைகளும் உண்டாகும்.
சமையல் அறை அமைப்பதற்கான இடங்களாக வீட்டில் இரண்டு இடங்களைத் தேர்வு செய்யலாம். இந்த நிலையானது எந்த திசையில் நீங்கள் உங்கள் வீட்டுத் தலைவாசல் வைத்துக் கட்டி இருந்தாலும் சரி, இதில் முதலாவது இடமாக தேர்வு செய்வது தென்கிழக்கு மூலையாகும். அதாவது தெற்கும், கிழக்கும் இணைகின்ற இடத்தில் கிடைக்கும் இடமே தென்கிழக்கு ஆகும்.
இப்படித் தென்கிழக்கில் அமைக்கப்படும் சமையல் அறையானது எப்போதும் சதுர சடிவில் அமையக்கூடாது. மாறாக செவ்வக வடிவில் அமைய வேண்டும்.
கிழக்கும் மேற்குமாக நீண்டவாக்கில் அமையலாம். இதே போல தெற்கும் வடக்கும் நீண்டவாக்கில் அமையலாம். இப்படி அமைந்தால் நிச்சயம் இந்த அறையானது செவ்வக வடிவத்தில் அமைந்திருக்கும். இந்த செவ்வக வடிவில் அமைந்த அந்த அறையானது கிழக்கு மேற்காக அமைந்தால் மிக்க நன்று.
இப்படி கிழக்கு மேற்குமாக நீண்டு உள்ள இந்த சமையல் அறையில் அந்த அறையின் கிழக்குச் சுவற்றில் அடுப்பு வைப்பதற்கான மேடை அமைக்கலாம்.
தேவைக்காக இந்த மேடையை கிழக்குச் சுவற்றில் துவங்கி தொடர்ந்து தெற்கு சுவற்றிலும் அமைத்துக் கொள்ளலாம். வடக்கு சுவற்றில் சமைப்பதற்கான அடுப்பு வைப்பதற்கு மேடை போடக்கூடாது. சமையல் அறை என்றாலே அங்கு அடுப்பு வைப்பதற்கான மேடையும் பொருட்களை வைத்துக்கொள்ள ஓர் அலமாரியும், பாத்திரங்கள் கழுவ சின்க் இருக்க வேண்டும்.
இதேபோல தென்கிழக்கு மூலையில் அமையும் சமையல் அறையில், நின்று சமைக்கும் போது சமைப்பவர்கள் கிழக்கு நோக்கி நின்று சமையல் செய்ய வேண்டும்.
சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை உங்களது வலது பக்கத்திலும், புழங்கிய கழுவ வேண்டிய பாத்திரங்களை உங்களது இடது பக்கத்திலும் இருக்கும்படி அமைத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது கழுவ வேண்டிய பாத்திரங்களை சமையல் அறையின் வடகிழக்கு மூலையில், அதாவது கிழக்கு தெற்குச் சுவற்றில் மேடை அமைத்தோம் அல்லவா, கிழக்கு மேடையின் வடக்கு ஒரத்தில் அதே நேரம் வடக்குச் சுவற்றில் ஒட்டாதபடி அந்த மேடை அமைத்து அந்த மேடையின் வடகிழக்கில் பாத்திரம் கழுவ தேவையான தொட்டி அமைத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல பரண், கப்போர்டு அமைக்க வேண்டுமாயின் சமையல் அறையின் தெற்கு மற்றும் மேற்கும் சுவற்றில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
கிழக்குச் சுவற்றைச்சார்ந்து சமையல் மேடையும் மேற்குச் சுவற்றில் கப்போர்டும் அமைத்துக் கொண்டால் அந்த அறையில் நின்று வேலை செய்யும் பெண் எப்போதும் கிழக்கும், மேற்கும் நடமாடிக் கொண்டே இருப்பாள்.
குறிப்பாக அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கில் சமையல் அறை அமைத்து அந்த அறைக்குள் பெண் கிழக்கு, மேற்கு பார்த்து அதிகம் நடந்து கொண்டிருந்தால் அந்த பெண் இயற்கையாகவே இனம்புரியாத ஒரு சக்தியை பெறுகிறாள்.
இதே சமையல் அறை, வடக்கு தெற்கு நீண்டிருந்து, அந்த பெண் இந்த சமையல் அறையில் தெற்கு, வடக்காக நடமாடிக் கொண்டிருந்தால் அவள் என்னவென்று தெரியாமல் தனது உடலின் சக்தியை விரயம் செய்கிறாள். எனவே இதை எல்லாம் அறிந்து சமையல் அறையை அமைக்க வேண்டும்.