மும்பை: மும்பையில் உள்ள ஹோட்டல்கள், பார்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றன. இரவு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளதால், பார்ட்டிகளில் கலந்துகொள்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது விருந்துகள் நடத்தும் ஓட்டல்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள்:- குடிபோதையினால் ஏற்படும் விபத்துகள் அல்லது தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க விருந்தினர்களுக்கு மது வழங்குவதில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
புத்தாண்டு தினத்தன்று காலை 5 மணி வரை ஹோட்டல்கள் திறந்திருக்கும். விருந்தினர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தடை செய்ய வேண்டும். அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு வசதியாக மாற்று ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும். பார்ட்டியில் மது அருந்துவதற்கு செல்லுபடியாகும் அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்பட வேண்டும்.
இதற்கு, அடையாள அட்டை வழங்க வேண்டும். ஓட்டல்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க வேண்டும்.