புதுடெல்லி: டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற ‘டி20’ உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அங்கிருந்து இன்று (ஜூலை 4) காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், டி20 உலகக் கோப்பையுடன், இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அனைத்து வீரர்களும் பிரதமர் மோடியுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மதியம் மும்பை வரும் வீரர்கள், மாலையில் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானத்திற்கு திறந்த பேருந்தில் ரோட் ஷோவில் செல்வார்கள். இரவு, வான்கடே மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. அப்போது பிசிசிஐ, சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.