சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி விடுதி கேன்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 8 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டதையடுத்து, சுகாதாரமற்ற கேன்டீனுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் படித்து வந்த 8 மாணவர்களுக்கு நேற்று திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது.
இதேபோல், 10 மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளது. பின்னர் அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கல்லூரி விடுதியில் உள்ள கேன்டீனில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதில்லை என்றும், முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், வேப்பேரியில் உள்ள அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் உள்ள கேன்டீனில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, மாணவர்களுக்கு உணவு வழங்கும் கேன்டீன் முறையான பராமரிப்பு மற்றும் சுகாதாரம் இன்றி மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. 77 கேன்டீனுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மாசுபட்டது என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக பாலிடெக்னிக் கல்லூரி விடுதியின் கேன்டீனுக்கு சீல் வைத்தனர். இந்த கேன்டீனை முழுமையாக சீரமைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே கேன்டீன் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.