அமராவதி: மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார். ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் பதவியேற்றார். அதன்பிறகு முதல் முறையாக டெல்லி சென்றுள்ள அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ராம்மோகன் நாயுடு, சீனிவாச வர்மா ஆகியோரை சந்தித்து பேசினார்.
சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்து மாநில அரசியல் நிலவரம் குறித்து பகிர்ந்து கொண்டார். பின்னர், ஜெகன் ஆட்சியில் ஆந்திர மாநில கஜானா காலியாக இருந்ததால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். குறிப்பாக, மாநிலப் பிரிவினை மசோதாவில் கூறப்பட்டுள்ளபடி கூடுதல் நிதியும், அமராவதி, போலவரம் அணைகளுக்குத் தேவையான நிதியும் கேட்டுள்ளார்.
மேலும், பெரிய தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகள், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு வசதித் திட்டங்கள், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள்தோறும் குடிநீர் குழாய் இணைப்பு ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமரை சந்தித்த ரேவந்த்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் டெல்லியில் முகாமிட்டுள்ளார். மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி, தங்கள் மாநிலத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், ரேவந்த் ரெட்டி நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.