சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து வெளிநபர்கள் 8-ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம்தேதி நடைபெற உள்ளது.பிரச்சாரம் 8-ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. அன்றுமாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை, யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது.
தேர்தல் விவகாரங்களை திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை வானொலி, வாட்ஸ்அப், முகநூல் மற்றும் வலைதளங்கள் வழியாக மக்கள் பார்வைக்கு வைக்கக் கூடாது. இந்த விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இந்த இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
தொகுதிக்கு தொடர்பு இல்லாத அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்குள் இருக்கும் அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு ஜூலை 10-ம்தேதி பொது விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டது.