அயோத்தி: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை விழா கடந்த ஆண்டு ஜனவரி 22 அன்று நடைபெற்றது. பிரதமர் மோடி விழாவிற்கு தலைமை தாங்கினார். இந்த நிலையில், குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா நேற்று தொடங்கியது. 3 நாள் கொண்டாட்டத்திற்காக ராமர் கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் பல்வேறு மத மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நேற்று காலை 8 மணிக்கு யஜுர்வேத பாராயணத்துடன் தொடங்கியது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் குழந்தை ராமர் சிலைக்கு அபிஷேகம் செய்தார். மதியம் 12.20 மணிக்கு சிறப்பு ஆரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, குழந்தை ராமருக்கு 56 வகையான உணவுகள் படைக்கப்பட்டன.
ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து குழந்தை ராமரை தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு சிலை நிறுவும் விழாவில் பங்கேற்க முடியாத 110 விஐபிக்கள் இந்த முறை அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார். யாகங்கள் மற்றும் ராம கதை சொற்பொழிவுகள் உள்ளிட்ட சிறப்பு பிரார்த்தனைகள் 3 நாட்களுக்கு நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதலாமாண்டு நிறைவையொட்டி, பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ்-தள பதிவில், “அயோத்தியில் குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, அனைத்து நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல நூற்றாண்டுகள் தியாகம், தவம் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு கட்டப்பட்ட இந்த கோயில் நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் ஒரு சிறந்த பாரம்பரியமாகும். இந்த தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோயில் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய ஒரு சிறந்த உத்வேகமாக மாறும் என்று நம்புகிறேன்.”