புதுடெல்லி: மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, டிசம்பர் மாதத்தில் நாட்டின் பொருட்கள் ஏற்றுமதி 1 சதவீதம் குறைந்து ரூ.3.27 லட்சம் கோடியாக உள்ளது. அதே நேரத்தில், இறக்குமதி 4.90 சதவீதம் அதிகரித்து ரூ.5.16 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு, அதாவது வர்த்தக பற்றாக்குறை ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்தது.
முன்னதாக, உலக வர்த்தக அமைப்பு நடப்பு ஆண்டிற்கான உலக பொருட்கள் வர்த்தக வளர்ச்சிக்கான மதிப்பீட்டை 3.30 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிராந்திய மோதல்கள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிச்சயமற்ற கொள்கை முடிவுகளைக் காரணம் காட்டி, அந்த அமைப்பு தனது மதிப்பீட்டைக் குறைத்திருந்தது.
மேற்கு ஆசிய நாடுகளில் மோதல்கள் தீவிரமடைந்தால், அதன் தாக்கம் மற்ற நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உணரப்படும் என்றும் அது கூறியிருந்தது. அது மட்டுமல்லாமல், அது கடல் போக்குவரத்தை பாதிக்கும் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்; இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அது கூறியிருந்தது.