புதுடெல்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், ஜன., 31-ல் துவங்கி, பிப்., 13 வரை நடக்க உள்ளது. இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர், வரும், 31-ல் துவங்க உள்ளது. வழக்கப்படி, பிப்., 1-ல், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்., 1-ல், 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் மட்டுமின்றி, இந்த ஆண்டின் முதல் பார்லிமென்ட் கூட்டத் தொடர் என்பதால், ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜன., 31-ல், பார்லிமென்ட் கூட்டுக் குழுவில் உரையாற்றுகிறார்.
அதன் பின், பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன்பின், பிப்., 1-ல், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பின், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டு, பார்லிமென்டின் இரு அவைகளிலும், பிரதமர் பதில் அளிப்பதோடு, கூட்டத்தொடர் நிறைவடையும்.
எனவே பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 2-வது வாரம் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.